Category: Navagraha Temples

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்

மன நோய் அகற்றும் ” திருவிடை மருதூர் “
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் ” மகாலிங்கமானார்”. இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.

புற்றுநோய் தீர்க்கும் ” திருந்துதேவன் குடி அருமருந்தம்மை ”

புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடன் தொல்லைகள் தீர்க்கும் ” திருச்சேறை ருண விமோச்சனர் “

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருண விமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று ” கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் ” சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் 
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் ” திருபுவனம் ” சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய “ஸ்ரீவாஞ்சியம்”
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் ” திருநல்லம் “
முக்கண்ணன் ” உமா மகேஸ்வரராய் “ மேற்கு நோக்கி வீற்றிருக்க, ” அங்கவள நாயகியாய் “அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். ” பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் “என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், ” ஸ்ரீ வைத்திய நாதர் “ சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. 

தீரா நோய்கள் தீர்க்கும் “வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் “
மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் ” வைத்தீஸ்வரன் கோவில் “. செவ்வாய் தோஷம் நீக்கும் ” அங்காரகனுக்குரிய ” திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் “தன்வந்திரி” இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை” 

கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் “கூத்தனூர்”. நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை – திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் “ஜூரகேஸ்வரர் ”

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருக

Advertisements

தட்சணாமூர்த்தியின் திருக்கோலங்கள்!

             பொதுவாக சிவன் கோவில்களில் தென்திசை நோக்கி அருள்புரியும் தட்சிணா மூர்த்தி, சில கோவில்களில் வித்தியாசமான திருக்கோலங்களில் காட்சி தருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். தஞ்சைக்கு அருகிலுள்ள திருவையாறு அய்யாறப்பர் திருக்கோவிலில், தனிச்சந்நிதியில் தெற்கு நோக்கி அருள்புரிகிறார் தட்சிணா மூர்த்தி. இவரது மேல்நோக்கிய வலக்கரத்தில் கபாலமும், கீழ்நோக்கிய வலக்கரத்தில் சின் முத்திரையும், மேல்நோக்கிய இடக்கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடக்கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன. இவரது காலடி யில் ஆமை இருப்பதைக் காணலாம்.


திருநாவலூர் திருத்தலத்தில் காளை வாகனத் துடன் நிற்கும் நிலையில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

திருப்பூந்துருத்தியில் வீணையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

கோவில்பட்டியிலிருந்து சங்கரன் கோவில் செல்லும் வழியில் உள்ள கழுகு மலை வெட்டு வான் என்ற ஊரிலிருக்கும் சிவன் கோவிலில், மிருதங்கம் வாசிக்கும் நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத் தில், ஹேமாவதி என்ற இடத்தில் உள்ள கோவிலில், ஐயப்பன்போல் அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

திருவிடைமருதூரில் உள்ள கோவிலில் உமையம்மையுடன் கூடிய நிலையில் தட்சிணா மூர்த்தி அருள்புரிகிறார். இவரை “சாம்ய தட்சிணாமூர்த்தி’ என்பர்.

வாதாபியில் உள்ள கோவிலில் அர்த்த நாரீஸ்வர வடிவத்தில் “வீணாதர தட்சிணா மூர்த்தி’ அருள்புரிகிறார்.

பொன்னும் பொருளும் அள்ளித் தரும் – குரு பகவானின் பரிபூரண அருள் பெற உதவும் – அற்புதமான ஆலயம்

வாசக அன்பர்களுக்கு வணக்கம். நிம்மதியும் , மகிழ்ச்சியும் நம் அனைவரின் குடும்பத்தில் என்றும் நிலவ அந்த பரம்பொருளை மனமார பிரார்த்திப்போம்.
இன்று நாம் பார்க்க விருப்பது , ஒரு மகத்தான ஆலயம் பற்றி. ஆலயம் அமைந்திருக்கும் இடம் – தென்குடி திட்டை. என்னிடம் ஜாதக பலன் கேட்டு வரும் வாசகர்களுக்கு , குரு பலன் கிடைக்க நான் அதிகம் பரிந்துரை செய்யும் ஸ்தலம். குரு பகவான் – நம் அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திர பாக்கியம் உள்பட பல முக்கிய விஷயங்களுக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார். நவ கிரகங்களில் முழு சுபர் .
குருப் பெயர்ச்சியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், நமைப் போன்ற மனிதர்களின் பொருளாதார வாழ்வில் – ஏற்ற , இறக்கத்தை ஏற்படுத்தி – உலக பொருளாதாரத்தையே , முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். சில வருடங்களுக்கு முன் , ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி – குரு பகவான் , தன பலமிழந்து நீச வீட்டில் , மகரத்தில் இருந்த போது நிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்கு முன் , இதே நிலைமை தான். பல வங்கிகள் திவால் ஆனது.
நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களும் குரு பார்வையைப் பொறுத்தே வேறுபடுகிறது.
ஜாதகப் படி ஜனன காலத்திலோ , அல்லது நடக்கும் கோச்சாரத்திலோ – குரு பகவான் , பலம் இழந்து அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தால் – உங்களால் இயன்றவரை அடிக்கடி இந்த ஆலயத்திற்கு சென்று , மனமார குருவருள் வேண்டி பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்வில் , நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.
எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு நீசமாக இருக்கிறாரோ, அவர்கள் நிச்சயம் இந்த ஆலயம் வந்து குருவுக்கு பரிகாரம் செய்தல் நலம் பயக்கும்.
நீண்ட நாட்களாக , நல்ல வேலை / தொழில் அமையாமல் அல்லல் படும் அனைவருக்கும் – ஒரு நிரந்தர தீர்வு கொடுத்து , ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு விடி மோட்சம் கொடுத்துள்ள ஆலயம் இது.
புத்திர சோகம் உள்ளவர்களுக்கும், தீய வழியில் செல்லும் குழந்தைகளுக்கு – நல்ல வழியில் வழிகாட்டிச் சென்று , அவர்களை மேம்படுத்தவும் , நவ கிரகங்களின் தோஷத்தை நீக்கவும் – இந்த சந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் , உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு ஆகும்.
இன்னும் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் . எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் – ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.
விட்ட குறை , தொட்ட குறை போல – அவர்கள் மண வாழ்வும், கொஞ்சம் நெருடலாகவே செல்லும். இவர்களும் ஒருமுறை இந்த ஆலயம் வந்து குரு பகவானுக்கு உரிய ப்ரீத்தி செய்வது அவசியம். அதன் பிறகு , உங்கள் வாழ்க்கை ஜாம் ஜாம் என்று செல்வது நிச்சயம்.
இனி , ஆலயம் பற்றிக் காண்போம்… :
தல அமைவிடமும், பெயர்க் காரணமும்
கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் திட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது திருதென்குடித்திட்டை எனும் திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. திட்டை என்ற பெயர் ஏன்?. புராண காலத்தில் ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகின் அனைத்து பகுதிகளும் மூழ்கி விட்டது. மும்மூர்த்திகளும் இருள் உலகம் முழுவதையும் சூழ்ந்து விட்டதை கண்டு மனம் கலங்கினர். அச் சமயம், ஒரு பகுதி மட்டும் சற்று மேடாக, திட்டாக காணப்பட்டதை கண்டனர். விரைந்தனர் அப் பகுதிக்கு. அங்கு “ஹம்” என்ற ஒலியுடன் பல விதமான மந்திர ஒலிகளும் கேட்டனர். அப்பொழுது ஜோதி சொரூபமாய் சிவ பெருமான் தோன்றக் கண்டனர். அவரை போற்றி துதித்தனர். மும் மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்க இத் தலத்திலேயே வீற்றிருந்து அருள் புரியலானார்.
இறைவனும், இறைவியும்
இறைவன் வசிஷ்டேஸ்வரர். தாமாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி. தேரூர் நாதர், பசுபதி நாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகின்றார். யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது. சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும் அருள் பெற்றது இத் தல இறைவனை வேண்டியே. பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது. இறைவி உலகநாயகி. சுகந்த குந்தளேஸ்வரி, மங்களேஸ்வரி என்றும் வழிபடப்படுகின்றாள். இத் தல அம்பிகையை வழிபட்டு சுகந்த குந்தலா எனும் பெண்ணொருத்தி இழந்த தன் கணவனை உயிருடன் மீட்டாள் என்கிறது தல புராணம். மங்களா எனும் வைசியப் பெண்ணொருவள் தன் விதவைக் கோலம் நீங்கி நீடூழி வாழ்ந்து மணித்வீபம் சென்றாள். சங்க பால மன்னன் என்பவன் தன் இறந்து போன மத்சலாவை உயிருடன் மீண்டும் பெற்று இழந்த தன் அரசையும் இத் தல இறைவனை வழிபட்டே பெற்றான்.

சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்
அனைத்து சிவாலயங்களைப் போலவே இங்கும் தெட்சிணாமூர்த்தி தென் புறத்தில் அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் குரு பகவான் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி விமானத்துடன், தனி சந்நதி கொண்டு காட்சி தருகின்றார். பெரும்பாலான குரு தலங்களில் குருவின் அதிதேவதையான தெட்சிணாமுர்த்தியே குருவாக பாவித்து வணங்கப்படுகின்றார். ஆனால், இத் தலத்தில் மட்டுமே குரு பகவான நவக்கிரக அமைப்பில் உள்ளது போல் தனி சந்நதியில் காட்சி அருள்கின்றார். இவரே இத் திருத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இத் தலத்தில் குரு பகவானுக்கு உற்சவ மூர்த்தியும் உண்டு. திருவிழா நாட்களில் இறைவனுடன் இவரும் வீதி உலா செல்வார். இத் திருத்தலத்தை தவிர குரு பகவான் வீதி உலா செல்வதை வேறு எங்கும் காண இயலாது. இது இத் தலத்தின் மிகப் பெரும் சிறப்பு.
குரு பார்க்க கோடி நன்மை
குரு பகவான் சப்த ரிஷிகளில் நடுவரான ஆங்கிரஸ மகிரிஷியின் புதல்வரே. இவரே தேவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். ஜோதிட ரீதியாக ஐந்தாவது இடத்தில் இருக்கும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். உயர் பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி இவற்றை சந்தோஷமாக அருள்பவர். குரு பகவான் முழுச் சுபர். தோஷங்களை நீக்குவதில் வல்லவர். கேதுவின் தோஷத்தை ராகுவும், ராகு, கேது இருவரின் தோஷங்களை சனியும், ராகு கேது தோஷத்தை புதனும், புதன் உட்பட ஐவரின் தோஷத்தை சந்திரனும் போக்க வல்லவர்கள். ஆனால் குரு பகவானோ அனைத்து நவக்கிர தோஷங்களையும் போக்க வல்லவர். எனவேதான் ” குரு பார்க்க கோடி நன்மை ” என்பர்.
பஞ்ச லிங்க ஷேத்திரம்
இத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாக ஐந்தாவதாய் எழுந்தருளியுள்ளார். எனவே இத் தலம் பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக விளங்குகின்றது. திருகாளத்தி, திரு அண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் என்ற பஞ்ச பூத தலங்களும் ஒருங்கிணைந்த தலமாக விளங்குகின்றது இத் திருதென்குடித்திட்டை திருக்கோவில்.
திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் திகழ்கின்ற இத் திருத்தலம் முற்றிலும் கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. நிறைய கோவில்கள் இவ்வண்ணம் கருங்கற் கோவில்களாக விளங்குகின்றன. ஆனால், இத் திருத்தலத்தில் மட்டுமே கொடி, கலசங்களும் கூட கருங்கற்களை கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. இப் பேரழகினை காண கண் கோடி வேண்டும்.
சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்
இத் திருக்கோவில் அக்கால கட்டிடக் கலைக்கு ஓர் சிறந்த உதாரணம். கோவிலின் மூலவர் விமானத்தில் சந்திர காந்தக் கல் மற்றும் சூரிய காந்தக் கல் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர காந்தக் கல் சந்திரனிடமிருந்து குளுமையை வாங்கி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை மூலவர் லிங்கத்தின் மீது தாமாகவே அபிஷேகம் செய்கின்றது. சிவ பெருமான் , சந்திரனது சாபத்தினை நீக்கி, தன் சிரசில் இருக்க இடம் கொடுத்ததால் சந்திரன் தன் நன்றிக் கடனாக அனு தினமும் இவ்வாறு அபிஷேகம் செய்வதாக ஐதீகம். இந்த அதிசயம் உலகில் வேறெங்குக் காண இயலாத ஒன்று.

தல விருட்சங்கள்
திருக்கோவிலின் முன் உள்ள சக்கர தீர்த்தம் எனும் திருக்குளம் தல தீர்த்தமாகும். இது மஹா விஷ்ணுவின் சக்ராயுதத்தால் உண்டாக்கப்பட்டது. விநாயகர் அருளுடன் சகல சித்திகளையும் அளிக்க வல்லது. இங்கு தேவர்களும், தேவ மாதாக்களும் மரம், செடி, கொடிகளாக மாறி தல விருட்சமாக அருள்கின்றனர். இங்கு மற்ற கோவில்களை போலன்றி தல விருட்சங்கள் பல, ருத்ரன் ஆல மரமாகவும், ருத்ராணி ஸமி மரமாகவும், விஷ்ணு அரச மரமாகவும், லஷ்மி வில்வ மரமாகவும், மற்றைய தேவர் அனைவரும் செடி, கொடிகளாகவும் திருத்தல விருட்சங்களாகவும் அருளுகின்றனர்.
சனி தோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி தோஷம் உள்ளவர்கள் ,இத் தல பசு தீர்த்தத்தில் நீராடி, பசுபதீஸ்வரரை வேண்டி, நவக்கிரகங்களை வலம் வந்து, சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகின்றன.

நவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய ஆலயம் !

பிராணனை உய்விக்கும் பிராணநாதேஸ்வரர்
மாங்கல்ய பலன் கொடுக்கும் மங்களாம்பிகை.

நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் ” திருமங்கலக்குடி “. இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக ” பிராணவரதேஸ்வரரும்”. அம்பாளாக ” மங்கள நாயகியும் ” அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என ” பஞ்ச மங்கல ஷேத்ரமாக” வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது.“மங்கலக்குடி ஆளும் ஆதிபிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாளவை போயலும் குற்றமிலார்கலே”எனப் புகழ்ந்துள்ளார் திருஞானசம்பந்தர்

நவக்கிரகங்களிடம் காலவ முனிவர் வரம் வேண்டுதல் 
ஒரு சமயம் இமயமலை சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார் “காலவர் ” என்ற மகா முனிவர் ஒருவர். முக்காலமும் அறிந்தவர். அவரிடம் வந்த துறவி ஒருவர் தன்னை பற்றிய வருங்காலத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அத்ற்கு காலவரோ ” துறவியே, எனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்ட உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை” எனக் கூறினார். அதற்கு துறவியோ ” முனிவரே அனைவரது வருங்காலம் பற்றி கூறும் உமது எதிர்காலம் பற்றி உமக்கு ஏதும் தெரியுமா” என வினவ. காலவர் ” நீர் யார் ? ” எனக் கேட்டார். துறவி ” நான் தான் கால தேவன் ” எனக் கூறி மறைந்தார். காலவ முனிவரும் தன் வருங்காலம் எப்படி இருக்கும் என தனது ஞானதிருஷ்டியால் காண, தன்னை , முன் வினைப் பயனால் ” குஷ்ட நோய் ” பிடிக்கபோவதை உணர்ந்தார். முன்வினைப் பயங்களுக்கு வினைகளை தருபவர்கள் நவக்கிரகங்களே என்றெண்ணி, அவர்களை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய நவகிரகர்கள் என்ன வரம் வேண்டு எனக் கேட்க, தன்னை குஷ்ட நோய் பீடிக்காமல் காத்தருள வேண்டினார். நவக்கிரக நாயகர்களும் அவ்வாறே ஆகட்டும் என ஆசீர்வதிதனர். இதனை அறிந்த பிரம்ம தேவர் நவகிரகங்களின் மேல் கடும் சினம் கொண்டார்.

நவக்கிரகங்கள் பிரம்மனிடம் சாபம் பெறுதல்
” நவக்கிரகங்களே, தேவர்களாய் இருப்பினும் தனித்து இயங்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை. சிவனின் ஆணைப்படியும், கால தேவனின் துணையுடனும் மட்டுமே நீங்கள் அவரவர் வினைக்கேற்ப நன்மை, தீமைகளை அளிக்க வேண்டும். இதை மீறி காலவ முனிவரை நீங்கள் காத்ததால், அத் தொழு நோய் உங்களை பிடிக்கும் ” என்றார் பிரம்ம தேவர். கலங்கின நவகிரகங்கள். பிரம்மனின் திருவடி பற்றி சாப விமோஷனம் கேட்டனர். மனமிறங்கிய நான்முகனும் அவர்களிடம், “அர்க்கவனம் என்ற தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் பிராணவரதரையும், மங்கல நாயகியையும் வழிபடுங்கள். கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்று கிழமை தொடங்கி 12 ஞாயிற்று கிழமைகள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமைகள் தோறும் நீராடி, வெள்ளெருக்கு இலையில் ஒரு பிடி தயிர் அன்னம் வைத்து உண்ணுங்கள் ” என்றார். மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க சொன்னார்.

நவக்கிரகங்களும் அவ்வாறே அர்க்கவனம் வந்து அப்பனையும், அம்மையையும் வழிபட்டனர். பிரம்மனது சாபத்தால் தொழு நோய் அவர்களை பற்றியது. அச் சமயம் அங்கு வந்த அகத்திய முனிவர், வழிபாடு முறை பற்றி விளங்கச் சொன்னார். அர்க்கவனத்தின் வட கிழக்கு பகுதியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார். கடுமையான உண்ணா நோன்பும், திங்கட் கிழமைகள் மட்டும் எருக்க இலையில் சிறிது தயிர் அன்னம் புசிக்க சொன்னார். அர்க்கவனத்தில் இருந்த ஒன்பது தீர்த்தங்களையும் ஆளுக்கு ஒன்றாக தேர்ந்து எடுத்து நீராடச் சொன்னார். எருக்க இலையில் தயிர் அன்னம் உண்ணும் பொழுது, அந்த இலையின் ஒரு அணுப் பிரமான அளவு அன்னத்தில் கலக்கும். அதுவே குஷ்ட நோய் தீர்க்கும் எனவும் விளக்கினார்.

நவக்கிரகங்கள் தங்கள் சாபம் நீங்கப் பெறுதல்
இவ்வாறு 78 நாட்கள் கடும் தவம் செய்த பின்னர், 79 ஆம் நாள்பிராணவரதரும் மங்கல நாயகியும் நவக்கிரகங்களுக்கு காட்சி தந்து ” நவக்கிரகர்களே, உமது தவம் மெச்சினோம். உம்மை பற்றிய தொழு நோய் முழுவதும் நீங்கட்டும். இந்த அர்க்க வனத்தின் வட கிழக்கு பகுதியில் ஒர் ஆலயம் உண்டாக்கி, உம்மை வந்து வழிபடுபவரது நவக்கிரக தோஷங்களை தீர்ப்பீராக. இத் தலம் நவக்கிரகர்களுக்கு உரிய பரிகார தலமாக விளங்கட்டும் ” என அருளினார்.

காலவ முனிவர் நவக்கிரகங்களுக்கென ஆலயம் அமைத்தல்

இதனிடையே, தன்னால் நவக்கிரகர்கள் தொழு நோயால் பிடிக்கப்பட்டதை அறிந்த காலவ முனிவர், ஓடோடி வந்து நவக்கிரகர்களிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டார். நவ நாயகர்களும் அவரை மன்னித்து தாங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வினாயகரை வழிபட்டனர். சாப பிணியான கோள் தீர்த்ததால் இவர் ” கோள் தீர்த்த வினாயகர் ” என வழிபடலானார். பின்னர் காலவ முனிவரிடம், இறைவன் ஆணைப்படி தங்களுக்காக தனி சன்னதிகள் கொண்ட ஆலயம் ஒன்றை உருவாக சொன்னார்கள். முனிவரும் அவ்வாறே, திருக் கோயில் ஒன்றை அமைத்து நவக் கிரக நாயகர்களை தனி சன்னதிகளில் பிரதிஸ்டை செய்தார்.

பிராண வரதேஸ்வரரும் , மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் ” திருமங்கலக்குடி ” என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும் தலம் ” சூரியனார் கோவில் ” என்றும் வழிபடலாயிற்று. சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் திருத் தலமாக விளங்குவது இத் திருமங்கலக்குடி.
மாங்கல்ய பலம் அருளும் மங்கலநாயகி

அந்நாளில் அரசனுக்கு சேர வேண்டிய வரிப் பணத்தை கொண்டு மந்திரி ஒருவர் கோவில் கட்டும் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வந்தார். ஒரு நாள் இதனை அறிந்த மன்னன் ” தனக்கு சேர வேண்டிய பணத்தை கொண்டு எனக்கே தெரியாமல், என் அனுமதியில்லாமல் ஆலயம் கட்டுவதா? ” என சினம் கொண்டு அமைச்சரை சிரச் சேதம் செய்ய ஆணையிட்டான். ஆணையும் நிறைவேறியது. துடிதுடித்துப் போன அமைச்சரின் மனைவி, இத் தலம் வந்து அம்மையிடம் ” தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு ” வேண்டினாள். அம்மையும் அவ்வாறே அமைச்சரை உயிர்ப்பித்து தந்தாள். அமைச்சரின் மாங்கல்ய பலத்தினை தந்திட்ட இத் தல அம்பாள் “மங்கலநாயகி” எனவும், இறைவன் பிராணனை திரும்ப தந்ததால் ” பிராணவரதேஸ்வரர் ” எனவும் வழிபடப்படுகின்றனர்.
பஞ்சமங்கள ஷேத்திரம் 

நவக்கிரகங்களின் தோஷங்களையே நீக்கிய இத் திருத் தலத்தினை வழிபட்ட பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும். நோய்கல் தீர்க்கும் திருத்தலம் இது. வியாதி உள்ளவர்கள், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு துவங்கி தொடர்ந்து 11 ஞாயிற்று கிழமைகள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டு அப் பிரசாதத்தினை உட்கொண்டால் வியாதிகள் அனித்தும் முற்றிலும் நீங்கப் பெறலாம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள நாயகி, மங்கள தீர்த்தம் மற்றும் மங்கள கோயில் என “பஞ்சமங்கள ஷேத்திரமாக” விளங்கும் திருத்தலம் இது

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் , நவ கிரக யாத்திரை தொடங்குவதாக இருந்தால் , முதலில் இந்த ஆலயம் சென்று விட்டுப் பின், நவ கிரக ஸ்தலங்களுக்குச் செல்லவும் !

கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில், சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குரங்காடு துறை எனப்படும் ஆடுதுறை தலம். (திருவாவடு துறை என்பது வேறு.) இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இறைவி பவளக்கொடியம்மையுடன் அருள்புரிகிறார். இந்தத் திருத்தலத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்திருப் பதுதான் “பஞ்ச மங்கலத் தலம்’ என்று சிறப்பித் துப் போற்றப்படும் திருமங்கலக்குடி திருத்தலம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி, மங்களாம்பிகை ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.
நவகிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டமையால், நவகிரக கோவில் களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!.

இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும்; ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் இது. கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள்- தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு..

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு திசை நோக்கியுள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும் நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொரு வர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்..

கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் உள்ளார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன..

சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. வடமொழியில் கோங்கிலவம் எனப் படும் வெள்ளெருக்கு தல விருட்சமாக விளங்கு கிறது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஆலயம் இது..

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில், அலன வாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை ஆலயம் எழுப்பச் செலவிட்டாராம். இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அவரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தாராம்..

இறக்கும்போது அவர், “நான் இறந்தவுடன் என் உடலைப் பல்லக்கில் திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். .

அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள். பல்லக்கு ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, பல்லக்கிலிருந்து கீழே குதித்த அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, பிராணநாதரைக் கட்டித் தழுவி, “பிராணனைக் கொடுத்த பிராண நாதா’ என்று போற்றி வழி பட்டாராம்..

(அன்று முதல் இறைவன் பிராண னைக் கொடுத்த அருள்மிகு பிராண நாதேஸ்வரர் என்றும்; மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அன்னை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகையென்றும் போற்றப்படுகின்றனர்.) அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர்- மங்களாம்பிகையிடம், “எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்’ என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது..

வடமொழியில் சிவா என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். “சிவசிவ’, “நமசிவாய’ என்று சொல்லும் பொழுதெல்லாம் “பொங்கும் மங்களம் எங்கும் தங்குக’ என்பதே பொருளாகும்..

நாம் வாழ்க வளமுடன் என்று சொல்வதும் இதைத்தான். திருமங்கலக்குடியென்ற பெயரே மங்களங்கள் நமக்குக் கிட்ட வேண்டுமென் பதைத்தான் குறிப்பிடுகிறது..

சோழநாட்டு வடகரைத்தலமான திருமங்கலக் குடியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரரைத் தொழுதால் மங்களங்கள் நம்மை நாடி வரும் என்பதில் சந்தேகமே இல்லை..